Breaking

Saturday, 16 March 2019

TNPSC - Blood and blood circulation (இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி ) (Zoology) | Group I, II, IIA, III, IV&VAO, VI, VII, VIII, IBPS, RRB, SSC, TET, UPSC.

இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி 
(Blood and blood circulation)

மனித இரத்தம்

இரத்தம் ஒரு திரவ இணைப்புத் திசுவாகும். இது திரவ ஆக்கக்கூறுகளையும்,திண்ம ஆக்கக்கூறுகளையும் கொண்டுள்ளன. 

மனித உடலில் சராசரியாக 4 முதல் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும்,தேவையில்லாத கழிவுகளையும்,வாயுக்களையும் கடத்துவதன் மூலம் உடல் சமநிலையில் இருக்க உதவுகிறது. 

திரவ ஆக்கக்கூறுகள் : 

பிளாஸ்மா, கனிம மற்றும் கரிம ஆக்கக்கூறுகள் திரவ ஆக்கக்கூறுகளாகும். 

திண்ம ஆக்கக்கூறுகள் : 

•எரித்ரோசைட்டுகள் 
•லுயுக்கோசைட்டுகள் 
•திராம்போசைட்டுகள் 

இவை மூன்றும் திண்ம ஆக்கக்கூறுகளாகும்.

பிளாஸ்மா :

பிளாஸ்மா என்பது இரத்தச் செல்கள் இல்லாத திரவமாகும். இது இரத்தத்தில் 55% காணப்படுகிறது. பிளாஸ்மா காரத்தன்மை கொண்ட வெளிர் மஞ்சள் நிற திரவமாகும். 


பிளாஸ்மாவில் 
•நீர் 
•புரதங்கள் 
•நொதிகள் 
•ஹார்மோன்கள் 
•கரைந்த நிலையிலுள்ள தனிமங்கள் 
•கழிவுகள் காணப்படுகின்றன. 

மேலும், பிளாஸ்மா மேற்கூறிய அனைத்துப் பொருள்களையும் கடத்தும் ஊடகமாகவும் செயல்படுகிறது.


இரத்தச் செல்கள் : 

இரத்தத்தில் 45% இரத்தச் செல்கள் காணப்படுகின்றன. 

இரத்தச் செல்கள் மூன்று வகைப்படும் 


1.எரித்ரோசைட்டுகள் (சிவப்பணுக்கள்) RBC 
2.லுயுக்கோசைட்டுகள் ( வெள்ளையணுக்கள்) WBC 
3.திராம்போசைட்டுகள் ( இரத்தத் தட்டுகள்). 


1. எரித்ரோசைட்டுகள் (சிவப்பணுக்கள்) : 

•விலா எலும்புகள் மற்றும் முள்ளெலும்புகளின் எலும்பு மஜ்ஜையில் சிவப்பணுக்கள் உருவாகின்றன. 

•இவை வட்ட வடிவ இரு பக்கமும் உட்குழிந்த மற்றும் தட்டையானவை. 

•ஹீமோகுளோபின் என்ற சுவாச நிறமியைப் பெற்று இருப்பதினால், இது சிவப்பு நிறமுடையதாகக் காட்சியளிக்கிறது. இந்த வாயுப் பரிமாற்றத்திற்கு (உயிர்வளி மற்றும் கரியமில வாயுவைக் கடத்துவதற்கு) உதவுகிறது.  

•மனிதச் சிவப்பணு உட்கரு அற்றது. 

•ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 5 மில்லியன் இரத்தச் சிவப்பணுக்கள் காணப்படுகின்றன. 

•இவற்றின் வாழ்நாள் 120 நாள்கள். 

•இவை கல்லீரலிலும், மண்ணீரலிலும் அழிக்கப்படுகின்றன. 

•சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் போது இரத்தசோகை என்றும், எண்ணிக்கை அதிகரிக்கும் போது பாலீசைதீமியா என்றும் கூறுவர்.


2. லுயுக்கோசைட்டுகள் (வெள்ளையணுக்கள்) : 

•எலும்பு மஜ்ஜையிலும்,நிணநீர் சுரப்பிகளிலும் உருவாக்கப்படுகின்றன. 

•வெள்ளையணுக்கள் நிறமற்ற, ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை. 

•கிருமிகளை அழித்து,செரித்து விடுவதால் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது. 

•ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில் சுமார் 8000 வெள்ளையணுக்கள் காணப்படுகின்றன. 

•இவற்றின் வாழ்நாள் 4 வாரங்கள்.

•உட்கரு உள்ள செல்கள். 

•சிவப்பணுகளின் எண்ணிகையோடு ஒப்பிடும் போது இவை எண்ணிக்கையில் குறைந்தவை.ஆனால், அளவில் பெரியவை. 

• வெள்ளையணுக்கள் எண்ணிக்கை குறையும் போது லியூகோபினியா என்றும், எண்ணிக்கை அதிகரிக்கும் போது லூகீமியா என்றும் கூறப்படுகின்றது. 

வெள்ளையணுக்கள் 2 வகைப்படும். அவை : 
1.துகளுள்ள வெள்ளையணுக்கள் : 

சைட்டோபிளாசத்தில் துகள்கள் நிரம்பியுள்ளன. துகளுள்ள வெள்ளையணுக்கள் 3 வகைப்படும். 

a.ஈஸ்னோஃபில்கள்; இவை 0.5-3.0% உள்ளன. 
b.பேஸோஃபில்கள்; இவை 0.1% உள்ளன. 
c.நியூட்ரோஃபில்கள் இவை 60-70% உள்ளன. 

2. துகளற்ற வெள்ளையணுக்கள் : 

சைட்டோபிளாசத்தில் துகள்கள் இல்லை. இவை 2 வகைப்படும். 

a.லிம்ஃப்போசைட்டுகள்; இவை 20-30% உள்ளன. 
b.மோனோசைட்டுகள்; இவை 1-4% உள்ளன.


3. திராம்போசைட்டுகள் (இரத்தத் தட்டுகள்) : 

•திராம்போசைட்டுகள் இரத்தத்தில் மிதக்கும் தட்டு வடிவச் செல்களாகும். 

•சிறிய உட்கரு அற்ற செல்களாகும். 

•இவை 1 கன மில்லிமீட்டர் இரத்தத்தில் 2,00,000 முதல் 4,00,000 வரை எண்ணிக்கையில் காணப்படுகின்றன. 

•இவற்றின் வாழ்நாள் ஒரு வாரம். 

•இவை மேக்ரோபேஜ்களால் செரிக்கப்படுகிறது. 

•இவை இரத்தம் உறைதலுக்கு உதவுகிறது.


இரத்தத்தின் பணிகள்

1. செரித்த உணவை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு செல்கிறது.

2. வளர்சிதை மாற்றத்தின்போது உண்டாகும் கழிவுப் பொருள்களைக் கழிவு நீக்க உறுப்புகளுக்குக் கொண்டு செல்கிறது. 


3. நாளமில்லா சுரப்பிகளின் சுரப்பு பொருள்களை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு செல்கிறது.


4. உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக் கொள்கிறது. 


5. உடல் திசுக்களை ஈரமாக வைத்துக் கொள்கிறது.


இரத்தத்தின் வகைகள் 

இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. 


இரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A, B, AB, O என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1, A2 என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. O பிரிவு இரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், O குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்” என்று பெயர். 

இரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O குரூப் ஆகும்.


இரத்தத்தில் உள்ள “பிளேட்லட்” அணுக்களின் வேலை 

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். 



டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள். 

இரத்தம் உறைதல் 

இரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

இரத்தச் சுழற்சி மண்டலம் 

உடலின் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குத் தேவையான பொருள்களை கடத்துவதற்கு இரத்தச் சுற்று அமைப்புகள் உதவுகின்றன. நமது உடலில் இரத்தச் சுற்று உறுப்புகளாக இதயம், தமனிகள், சிரைகள், தந்துகிகள் என்னும் இரத்தக் குழாய்களும், இரத்தம் என்னும் திரவத்திசு மற்றும் நிணநீர் ஆகியவை உள்ளன.


1628 ஆம் ஆண்டு வில்லியம் ஹார்வி என்ற மருத்துவர் மனிதனில் இரத்தச் சுழற்சியைக் கண்டறிந்தார். அதுவரை நம்முடைய உடல் முழுவதும் இரத்தத்தால் ஆனது மற்றும் நிலையானது எனக் கருதி கொண்டு இருந்தனர். 


வில்லியம் ஹார்வி (1578-1657) ஆங்கிலேய மருத்துவர் ஆவார். முதன்முதலில் இரத்தச் சுழற்சியையும், இரத்தத்தின் பண்புகளையும், இதயச் செயல்கள் பற்றியும் விளக்கினார்.


இரத்த ஓட்ட மண்டலம் 

இரத்த ஓட்ட மண்டலம் என்பது இதயம், இரத்தம், இரத்த குழாய்களை உள்ளடக்கியது. இம்மண்டலம் இரத்த ஓட்டத்தின் மூலம் ஆக்சிஜனையும், ஊட்டச்சத்துகளையும் உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்கிறது. 

இதயம் 

•மனித இதயம், உள்ளீடற்ற, நான்கு அறைகளோடு கூடிய தசையால் ஆன உறுப்பு. 

•இது கூம்பு அல்லது பிரமிட் வடிவம் வடிவமானது. 

•இதயத்தைச் சுற்றி இரட்டைச் சுவரினால் ஆன உறை உள்ளது. அதற்குப் பெரிகார்டியம் என்று பெயர். 

•பெரிகார்டிய சவ்விற்கு இடைப்பட்ட பகுதி பெரிகார்டிய திரவத்தால் நிரப்பப்பட்டு இருக்கிறது. இது இதயத்தை அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது. 

•இருதயம் மார்பு அறைக்குள், இரண்டு நுரையீரலுக்கும் இடையிலுள்ள மீடியாஸ்டினம் என்ற பகுதியில் வைக்கப்பட்டு இருக்கிறது.


இதயத்தின் நீள்வெட்டுத் தோற்றம் 

இதயம் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் இரத்தத்தை அனுப்புகிறது. இதயத்தில் ஏட்ரியம் என்று அழைக்கப்படும் இரண்டு மேல் அறைகளும், வெண்ட்ரிக்கிள் என்னும் தடித்த சுவரையுடைய இரண்டு கீழ் அறைகளும் உள்ளன. 

இதயம் ஏட்ரியோ-வெண்ட்ரிக்குலார் இடைச்சுவர் என்ற நீள்வட்டச் சுவரினால் வலப்பகுதி, இடப்பகுதி என பிரிக்கப்பட்டுள்ளது. இதயத்தின் வலப்பகுதி பெருஞ்சிரைகள் மூலம் ஆக்ஸிஜனற்ற இரத்தத்தைப் பெற்று ஆக்சிஜனேற்றமடைய நுரையீரலுக்குள் செலுத்துகிறது. 

இடதுப்பகுதி ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை நுரையீரல்களிடமிருந்து பெற்று, தமனிகள் மூலமாக உடலின் அனைத்துத் திசுக்களுக்கும் செலுத்துகிறது. 


ஒவ்வொரு இதயத்துடிப்பும், ஒரே சமயத்தில் இதயத்தின் இரண்டு பக்கங்களிலும் (மேல், கீழாக) உந்துதலை ஏற்படுத்தி இதயத்தை திறன்மிக்க உந்து உறுப்பாக உருவாக்குகிறது.


இதயத்தோடு தொடர்புடைய இரத்தக் குழாய்கள் 

வலது ஏட்ரியம் 

a.மேற்பெருஞ்சிரை 
b.கீழ்ப்பெருஞ்சிரை 
c.கொரோனரி சிரை 

வலது வென்டிரிக்கிள் 

நுரையீரல் தமனி 

இடது ஏட்ரியம் 

நுரையீரல் சிரைகள் 

இடது வெண்டிரிக்கிள் 

மகா தமனி




இதயத்தில் காணப்படும் வால்வுகள் 
1.மூவிதழ் வால்வு : 

வலது ஏட்ரியத்திற்கும், வலது வெண்டிரிக்கிளுக்கும் இடையில் காணப்படுகிறது. 



2. ஈரிதழ் வால்வு : 

இடது ஏட்ரியத்திற்கும், இடது வெண்டிரிக்கிளுக்கும் (மிட்ரல் வால்வு) இடையில் காணப்படும். 


3.அரைச்சந்திர வால்வு : 

நுரையீரல் தமனி, மகாதமனி புறப்படும் இடத்தில் காணப்படுகிறது. 


ஆரிக்கிள்கள் (ஏட்ரியங்கள்) 

•ஆரிக்கிள்களின் சுவர்கள் மெல்லிய தசையாலானவை. 


•வலது ஆரிக்கிள் மற்றும் இடது ஆரிக்கிள் இடை ஆரிக்குலார் தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளது. 


•ஆரிக்கிள்கள் இரத்தத்தைப் பெறக் கூடிய உறுப்புகளாக உள்ளன. 

•கீழ்ப்பெரும்சிரை, மேல்பெரும் சிரை மூலம் உடலிலிருந்து சுத்திகரிக்கப்படாத இரத்தம் முழுவதையும் வலது ஆரிக்கிள் பெறுகின்றது. 

•நான்கு நுரையீரல் சிரைகளின் மூலம் நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜன் மிக்க இரத்தத்தை இடது ஆரிக்கிள் பெறுகின்றது 

வெண்ட்ரிக்கிள்கள் 

•வெண்ட்ரிக்கிள்கள் தடித்த சுவர்களைக் கொண்டுள்ளன. 

•வலது வெண்ட்ரிக்கிள் மற்றும் இடது வெண்ட்ரிக்கிள், இடை வெண்ட்ரிக்குலார் தடுப்புச்சுவரால் பிரிக்கப் பட்டுள்ளன. 

•வெண்ட்ரிக்கிள்கள் இரத்தத்தை வெளிச் செலுத்தும் உறுப்புகளாக உள்ளன. 

•வலது வெண்டரிகிள் வலது ஆரிக்கிளிலிருந்து ஆக்ஸிஜனற்ற இரத்தத்தைப் பெற்று நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்குள் செலுத்துகின்றது. 

•இடது வெண்ட்ரிக்கிள், இடது ஆரிக்கிளிலிருந்து ஆக்ஸிஜன் மிகுந்த இரத்தத்தைப் பெற்றுப் பெருந்தமனிக்குள் செலுத்துகின்றது. பின்பு, கிளைகள் மூலமாக உடலின் பல பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் மிகுந்த இரத்தம் செலுத்தப்படுகிறது.


இதயத்தின் துளைகள் 

•வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்களுக்கு இடையில் வலது ஆரிக்குலோ - வெண்ட்ரிக்குலார் துளை அமைந்துள்ளது. 

•இடது ஆரிக்கிள் மற்றும் இடது வெண்ட்ரிக்களுக்கு இடையில் இடது ஆரிக்குலோ - வெண்ட்ரிகுலார் துளை அமைந்துள்ளது. 

இதய வால்வுகள் 

வலது ஆரிக்கிள் ஒரு பெரிய ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் துளை வழியாக வலது வெண்ட்ரிக்கிளில் திறக்கிறது. இத்துளை வெண்ட்ரிக்கிளை நோக்கி அமைந்துள்ள மூவிதழ் வால்வினால் பாதுகாக்கப்படுகிறது. இது இரத்தம் பின்னோக்கிச் செல்வதைத் தடுக்கின்றது. 



இடது ஆரிக்கிள் பெரிய ஒரு ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் துளை வழியாக இடது வெண்ட்ரிக்கிளோடு தொடர்பு கொண்டுள்ளது. இத்துளை, வெண்ட்ரிக்கிளை நோக்கி அமைந்துள்ள ஈரிதழ் வால்வினால் பாதுகாக்கப்படுகிறது. இவ்வால்வு மிட்ரல் வால்வு என்றும் அழைக்கப்படும். இது இரத்தம் பின்னோக்கிச் செல்வதைத் தடுத்து ஒழுங்கு படுத்துகிறது.


வலது வெண்ட்ரிக்கிள் ஒருதுளையின் வழியாக நுரையீரல் தமனியுடன் தொடர்பு கொண்டுள்ளது. இத்துளை, பிறை வடிவப் பல்மோனரி வால்வினால் பாதுகாக்கப்படுகிறது. 

இடது வெண்ட்ரிக்கிள், பிறைவடிவ வால்வினால் (பெருந்தமனி வால்வு) பெருந் தமனிக்குச் செல்லும் இரத்தம், மீண்டும் பின்நோக்கிச் செல்வதைத் தடுத்து ஒழுங்கு படுத்துகிறது. 


1 comment:

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491