விளையாட்டு விருதுகள்
விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்ற வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிரிக்கெட், ஹாக்கி, தடகளம் என பல்வேறு வகையான விளையாட்டுகளில் சிறப்பு பெறும் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசு, நாட்டின் உயரிய விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா தலைமையில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ், பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா உள்பட 12 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்று, இந்தாண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் பெறும் வீரர், வீராங்கனைகளின் பெயர்களை, மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அர்ஜூனா விருது
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உலக தடகள போட்டிகளில் ஜொலிக்கும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர் முகமது அனாஸ் யாஹியா, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ், உலக சாம்பியன்ஷிப் குத்துச்சாண்டைப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற வெள்ளிப் பதக்கம் வென்ற சோனியா லாதர், மாற்றுத்திறன் கொண்ட பாட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், கார் பந்தய வீரர் கெளரவ் சிங் கில் உட்பட 19 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
விளையாட்டுத்துறையில் ரத்தினம்போல் பிரகாசிக்கிறார் என்பதை குறிக்கும் வகையில் வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, "நம்பர் ஒன்" மல்யுத்த வீரரும், ஆசிய, காமன்வெல்த் சாம்பியனுமான பஜ்ரங் பூனியாவுக்கும்,
2016-ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளி வீராங்கனை தீபா மாலிக்கிற்கும், அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தயான்சந்த் விருது
மானுல் பிரெட்ரிக்ஸ், மனோஜ்குமார், லால்ரெம்சங்கா உள்ளிட்ட 5 பேருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது வழங்கப்பட உள்ளது. 3 பயிற்சியாளர்களுக்கு சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதும், 3 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா வாழ்நாள் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு ஏழரை லட்ச ரூபாயும், மற்ற விருதுகளுக்கு தலா 5 லட்ச ரூபாயுடன், சான்றிதழும், பரிசும் வழங்கப்படும்.
குறிப்பு
இந்த விருதுகள் அனைத்தும் வருகிற 29ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment